Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடி நீக்கம்.. தூக்கி எறியப்பட்ட வார்னர்

steve smith stood down from captaincy
steve smith stood down from captaincy
Author
First Published Mar 25, 2018, 2:19 PM IST


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், வார்னர்-டி காக் இடையே நடந்த சண்டை, டிவில்லியர்ஸின் மீது நாதன் லயன் பந்தை எறிந்துவிட்டு சென்றது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை ரபாடா மோதியது என சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், மூன்றாவது போட்டி நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட், பந்தை சேதப்படுத்தினார்.

மஞ்சள் நிறத்திலான ஒரு பொருளைக் கொண்டு பந்தை அவர் சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. இதுதொடர்பாக நடுவர்கள், அவரிடம் விசாரித்தபோது, பந்தை சேதப்படுத்தவில்லை; கறுப்புநிற துணியை மட்டும் தான் வைத்திருந்தேன், வேறு பொருள் இல்லை என தெரிவித்துவிட்டார்.

ஆனால், அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேன்கிராஃப்ட் தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் மேலும் சில வீரர்கள் இந்த செயலில் திட்டமிட்டே ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். 

இது தனக்கு தெரிந்தே நடந்ததாகவும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் தனது கேப்டன்சியில் நடக்காது எனவும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கேப்டனின் ஆதரவுடன் அணியின் வீரர்கள், பந்தை சேதப்படுத்தியது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிர்ப்புகள் வலுக்க தொடங்கின. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள் சிலரும் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பொறுப்பிலிருந்தும் சர்ச்சைக்குரிய வார்னரை துணை கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios