srilankan team drama and kohli break

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கோலியின் இரட்டை சதம் மற்றும் முரளி விஜயின் சதத்தால், 536 ரன்களைக் குவித்தது.

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய தவான், 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய புஜாராவும் 23 ரன்களில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலியும் முரளி விஜயும் சதம் விளாசினர். 155 ரன்களில் முரளி விஜய் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து வந்த வேகத்திலேயே ரஹானேவும் வெளியேறினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் கோலி, 156 ரன்களுடனும் ரோஹித் சர்மா, 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த கோலி, டெஸ்ட் போட்டியில் 6வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா அவுட்டாகி வெளியேறினார். முச்சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த கோலி, 243 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு அஸ்வினும் வெளியேற, ரிதிமான் சாஹாவும் ஜடேஜாவும் களத்தில் இருந்தனர். முதல் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க நேரத்தைக் கடத்திய இலங்கை வீரர்கள், இந்த போட்டியிலும் ஒரு நாடகம் ஆடினர்.

டெல்லியில் காற்று மாசு சற்று அதிகமாக இருந்ததால், நடுவர்களிடம் முறையிட்டுக்கொண்டே இருந்தனர். காற்று மாசு காரணமாக விளையாட முடியாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். பின்னர், முகமூடி அணிந்து விளையாடினர்.

தொடர்ந்து அவர்கள், நடுவர்களிடம் முறையிட்டும் விளையாட முடியாததுபோலவும் நடந்துகொண்டிருந்ததால், உடனடியாக முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார் இந்திய அணியின் கேப்டன் கோலி. 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோதே டிக்ளேர் செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை இலங்கை அணி எடுத்துள்ளது.

இலங்கை வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முகமூடி எதுவும் அணியாமல் இந்திய வீரர்கள் ஃபீல்டிங் செய்தனர்.