srilanka lose 4 wickets and india will have chance to win
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிவரும் இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி, 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி, 294 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவாணும் கே.எல்.ராகுலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தவாண் 94 ரன்களும் ராகுல் 79 ரன்களும் எடுத்தனர். புஜாரா 22 ரன்களுக்கு வெளியேறினார்.
முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய கேப்டன் கோலி, இந்த இன்னிங்சில் அதிரடியாக ஆடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். 8 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் முறையே புவனேஷ்குமார், ஷமி பந்துவீச்சில் வெளியேறினர். அதன்பின்னர், சிறிதுநேரம் நிலைத்த மேத்யூஸை உமேஷ் யாதவும் திரிமன்னேவை புவனேஷ்குமாரும் வெளியேற்றினர்.
இதையடுத்து 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை இலங்கை அணி எடுத்துள்ளது. ஆட்டம் முடிய இன்னும் 32 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில், 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி கனியைப் பறிக்கும்.
இலங்கை அணியும் வெற்றிக்குப் போராடும். எனினும் நல்ல ஃபார்மில் இருக்கும் புவனேஷ்குமாரின் பந்துவீச்சில் ரன் சேர்க்க திணறும் இலங்கை வீரர்கள், விக்கெட்டுகளையும் இழக்கின்றனர். எனவே புவனேஷ்குமாரின் கையில்தான் இந்தியாவின் வெற்றி இருக்கிறது.
