srilanka huge victory in first ODI against India
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவனும் ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். இவர்களைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் தோனி அரைசதம் கடந்தார். 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக தோனி அவுட்டானார். 38.2 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது.
இதையடுத்து 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 20.4 ஓவரில் இலக்கை எட்டியது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றது. டெஸ்ட் தொடரை இழந்ததை அடுத்து, அபார வெற்றி பெற்று பழிதீர்த்தது இலங்கை அணி.
