இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட் கீப்பர்கள் கிடைத்த வண்ணம் உள்ளனர். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வு பெற்றபிறகு, ரித்திமான் சஹா அவரது இடத்தை பிடித்தார். ஆனால் அவர் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காமல் இருந்துவந்தார். அவர் காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இடம்பெறவில்லை. 

சஹா இல்லாதபட்சத்தில் பார்த்திவ் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டு, இளம் வீரர் ரிஷப் பண்ட் வாய்ப்பை பெற்றார். ரிஷப் பண்ட், ஓரளவிற்கு பங்களிப்பு செய்தார். 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் உத்திகள் மீது விமர்சனங்கள் உள்ளன. எனினும் திறமையான வீரர் என்பதால், அவருக்கு போதிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து ஒலிக்கின்றன. மறுபுறம் இஷான் கிஷானும் விக்கெட் கீப்பராக உள்ளார். இஷான் கிஷான் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றபோதிலும் அவரும் விக்கெட் கீப்பர் என்பதால் விக்கெட் கீப்பிங் ஆப்ஷனில் இருக்கிறார். ஆனால் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பில்லை.

தற்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டிற்கான எதிர்காலம் மட்டுமே பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக ஆடி சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய 24 வயதான ஸ்ரீகர் பரத்தும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இனிமேல் பார்த்திவ் படேலோ தினேஷ் கார்த்திக்கோ மீண்டும் அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு. எனவே ஸ்ரீகர் பரத்தின் பெயர் தேர்வாளர்கள் மத்தியில் பேசப்படுவதாக கூறப்படுகிறது. அவருக்கு கூடிய விரைவில் அணியில் வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 

ஸ்ரீகர் பரத், 52 முதல் தர போட்டிகளில் ஆடி 2,905 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 35. 185 கேட்ச்களை பிடித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 4 சதங்களை விளாசியுள்ள ஸ்ரீகர், 2015ம் ஆண்டு கோவா அணிக்கு  எதிராக முச்சதம் விளாசியுள்ளார். இந்திய அணியில் ஆடுவதற்குத் தான் தகுதியான நபர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.