ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் கழுத்தில் அடிபட்டு கீழே விழுந்த இலங்கை நட்சத்திர வீரர் கருணரத்னே, திரும்ப எழவே முடியாததால் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார். 

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, லாபஸ்சாக்னே ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் 28 ரன்களுக்கே இழந்துவிட்ட போதிலும், பர்ன்ஸ் - டிராவிஸ் ஹெட் ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் பெரிய ஸ்கோரை எட்டியது. 

பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிய பர்ன்ஸ் - டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருமே சதமடித்து அசத்தினர். டிராவிஸ் ஹெட் 161 ரன்களும் பர்ன்ஸ் 180 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு அவர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே தொடர்ந்த பேட்டர்சனும் சதமடித்தார். பேட்டர்சன் 110 ரன்களுடனும் டிம் பெய்ன் 45 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 5 விக்கெட் இழப்பிற்கு 534 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திரிமன்னே மற்றும் கருணரத்னே ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். இருவரும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் கருணரத்னேவிற்கு பின்கழுத்தில் பலத்த அடிபட்டது. பந்து கழுத்தில் அடித்ததுமே சுருண்டு தரையில் விழுந்த கருணரத்னே திரும்ப எழவேயில்லை. அதிகமான வலியால் அவர் துடித்ததை அடுத்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார். இலங்கை அணியின் நட்சத்திர வீரர் கருணரத்னேவின் காயம் அந்த அணிக்கு பேரிழப்பு. அதன்பிறகு அந்த அணி திரிமன்னே, குசால் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் மளமளவென இழந்தது.