தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்று இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்று இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் குசால் பெரேராவின் அபாரமான சதத்தால் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

இதையடுத்து நேற்று முன் தினம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிந்துவிட்டது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 222 ரன்களையும் இலங்கை அணி 154 ரன்களையும் எடுத்தன. 68 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் டுபிளெசிஸ் அரைசதமும், மற்ற இரண்டு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தையே எட்டினர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்திலும் 0 ரன்னிலும் வெளியேற, அந்த அணி வெறும் 128 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது. 

இதையடுத்து 197 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது. இதன்மூலம் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அணியாகவும் நம்பர் 1 அணியாகவும் திகழும் இந்திய அணியே, கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. தோல்வியுடன் தான் நாடு திரும்பியது. இந்நிலையில், இலங்கை அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளது.