ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரே டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஆசியாவிலேயே அதிகபட்சமான வெற்றி இலக்கை எட்டி சாதித்தது.

ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்பில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி 2-வது நாள் ஆட்டத்தின்போது 94.4 ஓவர்களில் 356 ஓட்டங்களூக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் கிரெய்க் இர்வின் அதிகபட்சமாக 160 ஓட்டங்கள் அடித்தார்.

இலங்கையின் ரங்கனா ஹெராத் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, 3-வது நாளில் 102.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 346 ஓட்டங்கள் எடுத்தது. உபுல் தரங்கா அதிகபட்சமாக 71 ஓட்டங்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வேயின் கிரேமி கிரீமர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர், முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்கல் முன்னிலைப் பெற்ற நிலையில் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே 4-வது நாள் ஆட்டத்தின்போது 107.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 377 ஓட்டங்கள் எடுத்தது. சிகந்தர் ராஸா 127 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கையின் ரங்கனா ஹெராத் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 388 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இலங்கை, ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று 114.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 391 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்று அசத்தியது.

நிரோஷன் திக்வெல்லா அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் எடுத்தார். குணரத்னே 80 ஓட்டங்கள், தில்ருவன் பெரேரா 29 ஓட்டங்ககளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜிம்பாப்வேயின் கிரீமர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

குணரத்னே ஆட்டநாயகன் விருதையும், ரங்கனா ஹெராத்து தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின்மூலம் கொழும்பு மைதானத்தில் எதிரணியால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கை (388) எட்டி இலங்கை சாதனை படைத்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 352 ஓட்டங்களை எட்டியதே இலங்கையின் அதிகபட்ச வெற்றி இலக்காக இருந்தது.

இலங்கை அணி தற்போது எட்டியுள்ள இந்த இலக்கு, ஆசியாவிலேயே அதிகபட்சமானதும், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை எட்டப்பட்டதிலேயே 5-ஆவது பெரிய இலக்கும் ஆகும்.