Sri Lanka defeated Sri Lanka by a brilliant opener

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது இந்தியா.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் தம்புல்லா நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணியில் குல்தீப் யாதவ்க்கு பதிலாக யுவேந்திர சாஹலுடன் களமிறங்கியது இந்தியா.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கையின் இன்னிங்ஸை டிக்வெல்லாவும், குணதிலகாவும் தொடங்கினர்.

முதலில் நிதானமாக ஆடிய இந்த இணை, அடுத்த வேகமாக ஓட்டங்கள் சேர்க்க, 10 ஓவர்களில் 55 ஓட்டங்களை எட்டியது இலங்கை.

சிறப்பாக ஆடிய இந்த இணை, இலங்கை அணி 14 ஓவர்களில் 74 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 44 பந்துகளைச் சந்தித்த குணதிலகா 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் டிக்வெல்லாவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். இந்த இணையால் 18.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது இலங்கை. டிக்வெல்லா 65 பந்துகளில் அரை சதமடித்தார். இலங்கை அணி 24.3 ஓவர்களில் 139 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்வெல்லா ஆட்டமிழந்தார். அவர் 74 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் சேர்த்து கேதார் ஜாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பிறகு குஷல் மென்டிஸ் 37 பந்துகளில் 36 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, கேப்டன் உபுல் தரங்கா 13 ஓட்டங்களில் அவுட்டானார். கபுகதேரா ஓரு ஓட்டம் எடுத்த நிலையில் கோலியின் பந்துவீச்சில் அவுட்டானார்.

இதன்பிறகு டி சில்வா 2 ஓட்டங்கள், திசாரா பெரேரா 0, சன்டாகன் 5 ஓட்டங்கள், மலிங்கா 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டான விஸ்வா பெர்னாண்டோ டக் அவுட்டானார்.

இறுதியில் இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

மேத்யூஸ் 50 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா, யுவேந்திர சாஹல், கேதார் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன் அதிரடியாக ஆட, ரோஹித் சர்மா 4 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதையடுத்து தவனுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி.

இந்த இணையால், 10 ஓவர்களில் 64 ஓட்டங்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து வேகம் காட்டிய தவன், சன்டாகன் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 36 பந்துகளில் அரை சதம் எடுத்ததால் 15-வது ஓவரில் 100 ஓட்டங்களை எடுத்தது இந்தியா.

டிசில்வா வீசிய 22-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டிய தவன், 71 பந்துகளில் சதம் கண்டார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 50 பந்துகளில் அரை சதம் கண்டார்.

டி சில்வா பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை வெற்றியில் முடித்தார் தவன். இந்தியா 28.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஷிகர் தவன் 90 பந்துகளில் 132 ஓட்டங்கள், கோலி 70 பந்துகளில் 82 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஷிகர் தவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.