Sri Lanka defeated India in the championship trophy and secured the semi-finals
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் வீழ்த்தி அரையிறுதிக்கு வாய்ப்பை தக்கவைத்தது இலங்கை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – இலங்கை ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தேர்வு செய்தது.
ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்தில் நிதானம் காட்ட, 10 ஓவர்களில் 48 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது இந்தியா.
திசாரா பெரேரா வீசிய 20-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி 58 பந்துகளில் அரை சதம் கண்ட ரோஹித் சர்மா, அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை விரட்டினார்.
ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து ஷிகர் தவன் 69 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனிடையே தொடர்ந்து வேகமாக ஓட்டங்கள் சேர்த்த ரோஹித் சர்மா, மலிங்கா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 79 பந்துகளில் 78 ஓட்டங்கள் குவித்து கையோடு ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24.5 ஓவர்களில் 138 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி டக் அவுட்டானார்.
பின்னர் வந்த யுவராஜ் சிங் 18 பந்துகளில் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் குணரத்னே பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த தோனி, சிக்ஸரை விளாசி ஓட்டங்கள் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தவன், பிரதீப் வீசிய 40-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி 112 பந்துகளில் சதத்தை எட்டினார்.
தவனும், தோனியும் அசத்தலாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்தியா 44.1 ஓவர்களில் 261 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தவனின் விக்கெட்டை இழந்தது. அவர் 128 பந்துகளில் 125 ஓட்டங்கள் குவித்து மலிங்கா பந்துவீச்சில் மென்டிஸிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து வந்த ஹார்திக் பாண்டியா, லக்மல் பந்துவீச்சில் பிரமாண்ட சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 5 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து கேதார் ஜாதவ் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய தோனி, 46 பந்துகளில் அரை சதம் கண்டார்.
தொடர்ந்து வேகம் காட்டிய தோனி 52 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் குவித்தது இந்தியா.
கேதார் ஜாதவ் 25 ஓட்டங்களுடனும், ஜடேஜா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கைத் தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இலங்கை அணியில் டிக்வெல்லா 7 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, குணதிலகாவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். அதிரடியாக ஆடிய குணதிலகா 47 பந்துகளில் அரை சதமடிக்க, ஜடேஜா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 65 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் மென்டிஸ்.
பாண்டியா பந்துவீச்சில் மென்டிஸ் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, 26-ஆவது ஓவரில் ஓட்டங்களைக் கடந்தது இலங்கை. அந்த அணி 27.5 ஓவர்களில் 170 ஓட்டங்களை எடுத்திருந்தபோது குணதிலகா ரன் அவுட்டானார். அவர் 72 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் குஷல் பெரேரா களமிறங்க, மென்டிஸ் 93 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார்.
பிறகு கேப்டன் மேத்யூஸ் களமிறங்க, குஷல் பெரேரா 44 பந்துகளில் 47 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.
இதையடுத்து மேத்யூஸுடன் இணைந்தார் குணரத்னே. இந்த ஜோடி அசத்தலாக ஆட, இலங்கை அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் குவித்து வெற்றிப் பெற்றது
மேத்யூஸ் 52 ஓட்டங்கள், குணரத்னே 34 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட் எடுத்தார்.
குஷல் மென்டிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.
அதேசமயம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா அதில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
