தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை அணி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆறு மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்தபோதும், தென் ஆப்பிரிக்க அணியால் வெற்றி பெற முடியவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 63, ஹென்ரிக்ஸ் 41 ஓட்டங்கள் (34 பந்துகளில்) எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் குலசேகரா, பிரசன்னா, சன்டகன், குணரத்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் டிக்வெல்லா 57 பந்துகளில் 68 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, வெற்றி எளிதானது.

பிரசன்னா 16 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள் குவிக்க, இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் குவித்து வெற்றி கண்டது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இலங்கை வீரர் டிக்வெல்லா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.