srh skipper kane williamson reached new milestone in ipl

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கெய்லை சமன் செய்துள்ளார் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன்.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கிய ஹைதராபாத் அணி, சிறந்த பவுலிங் அணி என பெயர் பெற்றது. டெல்லிக்கு எதிரான போட்டியில், பேட்டிங்கிலும் வெளுத்து வாங்கிய ஹைதராபாத் அணி, இந்த சீசனின் வலுவான அணியாக திகழ்கிறது. முதல் அணியாக பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது. 

ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன், வீரராகவும் கேப்டனாகவும் சிறந்து விளங்குகிறார். இரண்டு பணியையும் செவ்வனே செய்துவருகிறார். இதுவரை இந்த சீசனில் 13 போட்டிகளில் ஆடி 8 அரைசதங்களை அடித்துள்ளார் கேன் வில்லியம்சன். பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று அடித்த அரைசதம் இந்த சீசனில் அவரது 8வது அரைசதம்.

இந்த சீசனில் அதிகமான அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்றுள்ளார். 625 ரன்களுடன், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலிலும் ராகுலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒரு சீசனில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களில் முதல் மூன்று இடங்களில் கோலி, வார்னர் மற்றும் கெய்ல் உள்ளனர். இதில் கெய்லுடன் இந்த சாதனையை பகிர்ந்துகொள்கிறார் வில்லியம்சன். இன்னும் ஹைதராபாத் அணிக்கு போட்டிகள் உள்ளதால், கெய்லை முந்திவிடுவார்.

முதலிடத்தில் கோலி:

இந்த பட்டியலில் 4 சதங்கள், 7 அரைசதங்கள் என மொத்தம் 11 முறை 50 ரன்களை கடந்த கோலி முதலிடத்தில் உள்ளார். 2016 ஐபிஎல் சீசனில் கோலி, 11 முறை 50 ரன்களை கடந்துள்ளார். 

இரண்டாவது இடத்தில் வார்னர்:

2016 ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணியில் ஆடிய வார்னர், 9 அரைசதங்கள் அடித்து இரண்டாமிடத்தில் உள்ளார்.

மூன்றாமிடத்தில் கெய்ல்:

2012 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக ஆடிய கெய்ல், ஒரு சதம், 7 அரைசதங்கள் என 8 முறை 50 ரன்களை கடந்துள்ளார். தற்போது வில்லியம்சன் கெய்லை சமன் செய்துள்ளார்.

ஹைதராபாத் அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி உள்ளது. அதன்பிறகு பிளே ஆஃப் போட்டிகளும் இருப்பதால், கெய்லையும் வார்னரையும் முந்திவிட வில்லியம்சனுக்கு வாய்ப்புள்ளது. ஆனால், கோலியை முந்த வாய்ப்பில்லை.