srh proved that they can batted well

பவுலிங்கில் சிறந்த அணியாக அறியப்படும் ஹைதராபாத் அணி, இந்த தொடரில் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காமல் இருந்துவந்தது. ஆனால் டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 187 ரன்களை எளிதாக எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸின் விக்கெட்டை மட்டுமே ஹைதராபாத் அணி இழந்தது.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது பரபரப்பான கட்டத்தை ஐபிஎல் எட்டியுள்ளது. இந்த சீசனில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவந்த மும்பை அணி, தற்போது தொடர் வெற்றிகளின் மூலம் தங்களின் உண்மை முகத்தை காட்ட தொடங்கியுள்ளனர். 

இந்த சீசன் தொடங்கியதிலிருந்து பவுலிங்கின் மூலம் எதிரணிகளை மிரட்டி, பவுலிங்கில் சிறந்த அணியென பெயர் பெற்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காமல் இருந்துவந்தது.

ஆனால் நேற்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில் தாங்கள் பேட்டிங்கிலும் சிறந்த அணிதான் என்பதை நிரூபித்து காட்டியது. பேட்டிங்கில் சிறந்த அணி என்பதை பறைசாற்றும் விதமாகவே ஹைதராபாத்தின் பேட்டிங் அமைந்திருந்தது. 

இதுவரை 11 போட்டிகளில் ஆடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஹைதராபாத் அணி, அணியின் கூட்டு முயற்சியால் தான் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட வீரரின் ருத்ரதாண்டவத்தால் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது.

119 என்ற எளிய இலக்கை எட்டவிடாமல் மும்பை அணியை வீழ்த்தியது ஹைதராபாத். அதைத்தொடர்ந்து அடுத்த போட்டியிலேயே, கெய்ல், ராகுல் போன்ற அதிரடி வீரர்களை கொண்டுள்ள பஞ்சாப் அணியை 133 ரன்களை எட்டவிடாமல் சுருட்டியது. 

இவ்வாறு மிக குறைந்த ரன்களை அடித்திருந்த போதும், அதைக்கூட எட்டவிடாமல் மும்பை, பஞ்சாப் போன்ற வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணிகளை சுருட்டிய ஹைதராபாத் அணி, 180ஐத் தாண்டிய இலக்குகளை விரட்ட முடியாமல் இரண்டு போட்டிகளில் தோற்றது. 

பஞ்சாப் நிர்ணயித்த 194 ரன்கள் என்ற இலக்கையும், சென்னை நிர்ணயித்த 183 ரன்கள் என்ற இலக்கையும் எட்ட முடியாமல் ஹைதராபாத் தோல்வியை தழுவியது. இந்த இரண்டு தோல்விகளும்தான் இந்த சீசனில் அந்த அணி அடைந்த தோல்வி. இந்த இரண்டு போட்டிகளிலுமே 178 ரன்களைத்தான் ஹைதராபாத் அணி எடுத்தது.

இவ்வாறு பெரிய இலக்கை விரட்ட முடியாமலும், முதல் பேட்டிங்கிலும் பெரிய ஸ்கோரை அடிக்காமலும் இருந்து வந்தது ஹைதராபாத் அணி. ஆனால் நேற்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில், பேட்டிங்கும் சிறப்பாக ஆடியது.

188 ரன்கள் என்ற இலக்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது. ஷிகர் தவான் - வில்லியம்சன் ஜோடியை டெல்லி அணியால் இறுதிவரை பிரிக்கவே முடியவில்லை. 

பவுலிங் அணியாக அறியப்பட்டபோதே வெற்றிகளை குவித்த ஹைதராபாத், தற்போது பேட்டிங்கிலும் சோபிக்க தொடங்கியதால், சென்னை, பஞ்சாப், மும்பை ஆகிய வலுவான எதிரணிகள், ஹைதராபாத்தை கண்டு கூடுதலாக நடுங்க தொடங்கியுள்ளனர்.