சர்ச்சைகளுக்கு பெயர்போன ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில், தான் ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், அதன் தொடக்க காலத்தில் ரசிகர்களுக்கு பெரும் வியப்புகளையும் ஆச்சரியங்களையும் அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எதிரும் புதிருமாக இருந்த எதிரணி வீரர்கள் ஒன்றாக ஆடியது, முறைத்துகொண்ட மற்றும் மோதிக்கொண்ட வீரர்கள் கட்டி தழுவிக்கொண்டது, ஒன்றாக ஆடி நண்பர்களாக இருந்த வீரர்கள் மோதிக்கொண்டது என பெரும் ஆச்சரியங்களை ஐபிஎல் ஆரம்பத்தில் வழங்கியது. 

2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல்லில் முதல் சீசனிலேயே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது, ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்ததுதான். 2008 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியில் ஆடிய ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைய, ஸ்ரீசாந்தோ களத்திலே கண்ணீர் விட்டு அழுதார். அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், இன்றும் பேசப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீசாந்த் மனம் திறந்துள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர்போன ஸ்ரீசாந்த், பிக்பாஸ் வீட்டிலும் பல சர்ச்சைகளை சந்தித்தார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கடந்த வியாழக்கிழமை வெளியான பகுதியில் ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கிய சம்பவம் குறித்து பகிர்ந்த ஸ்ரீசாந்த், மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதும் ஹர்பஜனை சீண்டும்படியான வார்த்தைகளை நான் கூறியிருக்கக்கூடாது. அதுதான் அவரை கோபமடைய செய்தது. இருப்பினும் ஹர்பஜன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அந்த சம்பவத்துக்கு பிறகு இருவரும் சந்தித்து எங்களுக்கு இடையேயான பிரச்னையை தீர்த்துக்கொண்டோம் என்று ஸ்ரீசாந்த் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.