இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் தன்னை நெகிழவைத்த தருணம் ஒன்றை உருக்கமாக பகிர்ந்துள்ளார். 

சூதாட்டப் புகார் காரணமாக ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது கிரிக்கெட் வாரியம். ஸ்ரீசாந்த் இருக்கும் இடத்தில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. ஸ்ரீசாந்த் என்றாலே சர்ச்சை எனுமளவிற்கு சர்ச்சைகளில் சிக்கியவர் ஸ்ரீசாந்த். ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது, சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது போன்ற பரபரப்புகளுக்கு சொந்தக்காரர்.

கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஸ்ரீசாந்த், ஜாரீர் கான் நடித்த அக்சர்-2 என்ற பாலிவுட் படத்தில் நடிகராக அறிமுகமானார். நடிப்பு ஒருபுறமிருக்க, பாஜகவில் இணைந்த ஸ்ரீசாந்த், 2016ல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

இவ்வாறு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டபிறகு சினிமா, அரசியல் என பலதுறைகளில் காலடி பதித்த ஸ்ரீசாந்த், சல்மான் கான் தொகுத்து வழங்கிவரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனிலும் கலந்துகொண்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான ஸ்ரீசாந்த், பிக்பாஸுக்கு சென்றால் அங்கும் சர்ச்சை தான். சக போட்டியாளரான சோமி கானுடன் சண்டை, சல்மான் கானுடன் வாக்குவாதம் என பரபரப்பை கிளப்பினார் ஸ்ரீசாந்த். அங்கும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்த ஸ்ரீசாந்த், அண்மையில் அவரது மனைவியின் வீடியோவை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். 

ஸ்ரீசாந்த் என்னதான் சர்ச்சைகளுக்கு பெயர்போனவராக இருந்தாலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான 2 தருணங்களில் இந்திய அணிக்காக ஆடி பங்களிப்பை அளித்துள்ளார். 2007ல் டி20 உலக கோப்பையை வென்றபோதும், 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்றபோதும் இந்திய அணியில் இருந்தார் ஸ்ரீசாந்த்.

இந்நிலையில், தனது சக போட்டியாளரான அனுப் ஜலோடாவிடம் சச்சின் குறித்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து நெகிழ்ந்தார். அனுப் ஜலோடாவிடம் பேசிய ஸ்ரீசாந்த், நான் சச்சின் டெண்டுல்கர் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2011 உலக கோப்பையை வென்றபிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து சச்சின் டெண்டுல்கர் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது, அந்த நேர்காணலை நடத்தியவர், என் பெயரை தவிர உலக கோப்பையில் ஆடிய அனைத்து வீரர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு சச்சினிடம் கருத்து கேட்டார். என் பெயரை மட்டும் விட்டுவிட்டார். ஆனால் நேர்காணல் முடியும் தருணத்தில், என் பெயரை குறிப்பிட்டு ஸ்ரீசாந்தின் பங்களிப்பும் முக்கியமானது என்று என்னை மட்டும் ஒதுக்கிவிடாமல் என்னை நினைவுகூர்ந்து குறிப்பிட்டார். அவர் எனது பெயரை குறிப்பிட்ட அந்த தருணம் நெகிழ்ச்சியில் மனம் உடைந்து அழுதுவிட்டேன் என்று ஸ்ரீசாந்த் உருக்கமாக தெரிவித்தார்.