கேப்டவுன்,

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

ஸ்டீபன் குக் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஹசிம் அம்லா 29 ஓட்டங்களிலும், டுமினி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். 66 ஓட்டங்களுக்குள் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் டீன் எல்கர் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் இணைந்த பாப் டுபிளிஸ்சிஸ் 38 ஓட்டங்களும், தெம்பா பவுமா 10 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அபாரமாக ஆடிய டீன் எல்கர் 186 பந்துகளில் 12 பவுண்டரியுடன் சதத்தை எட்டினார். அவர் அடித்த 6-வது சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 272 ஓட்டங்களை எட்டிய போது டீன் எல்கர் (230 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 129 ஓட்டங்கள்) லக்மல் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் மென்டிஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நேற்றைய ஆட்டம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்கள் எடுத்தது.

குயின்டான் டீ காக் 68 ஓட்டங்களுடனும், கைல் அப்போட் 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.