ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 32.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்கள் எடுத்தது. அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மட்டும் அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலாண்டர் அபாரமாக 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 100.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. டி காக் அதிகபட்சமாக சதம் கடந்து 104 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 241 ஓட்டங்கள் பின்தங்கிய ஆஸ்திரேலிய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. 3-ஆவது நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் அந்த அணி 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை கவாஜா 56, ஸ்மித் 18 ஓட்டங்களுடன் தொடங்கினர். இதில் கவாஜா 64 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, தொடர்ந்து வந்த வோஜஸ் 2 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.
ஸ்மித் சற்று நிலைக்க, மறுமுனையில் பெர்குசன், நெவில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, மென்னி, ஸ்டார்க் டக் அவுட் ஆயினர். தகுந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காத ஸ்மித் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 4 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், 60.1 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி. ஹேஸில்வுட் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அப்பாட் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளும், ரபாடா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனால், தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கைல் அப்பாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
