South Africa to defeat India
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையே செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வந்தது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான இந்த 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 113.5 ஓவர்களில் 335 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 94 ஓட்டங்கார் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஏறக்குறைய அந்த இலக்கை நெருங்கியது. எனினும், 92.1 ஓவர்களில் 307 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் கோலி சதம் கடந்து 153 ஓட்டங்கள் விளாசினார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்ன் மோர்கெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர், முதல் இன்னிங்ஸில் 28 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 91.3 ஓவர்களில் 258 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 80 ஓட்டங்கள் எட்டினார்.
இந்தியாவின் முகமது ஷமி 4 பேரை வீழ்த்தினார்.
இறுதியாக 287 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4-ஆம் நாள் முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கடைசி நாள் ஆட்டத்தை நேற்று புஜாரா 11 ஓட்டங்கள், பார்த்திவ் படேல் 5 ஓட்டங்களுடன் தொடங்கினர். இதில் புஜாரா 19 ஓட்டங்களுக்கு வெளியேற, அடுத்த 3 ஓவர்களிலேயே பார்த்திவ் படேலும் அதே ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
புஜாராவை அடுத்து வந்த ரோஹித் நிலைத்து ஆட, மறுமுனையில் பாண்டியா 6 ஓட்டங்களில் கிடி பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த அஸ்வினும் 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்தவர்களில் ஷமி 28 ஓட்டங்கள் அடிக்க, கடைசி விக்கெட்டாக பும்ரா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இப்படி இந்தியா 50.2 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இஷாந்த் சர்மா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் எல்.கிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் 39 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்திய எல்.கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
