ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 100.5 ஓவர்களில் 326 ஓட்டங்கள் குவித்தது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 32.5 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் வெர்னான் பிலாண்டர் 5 விக்கெட்டுகளையும், கைல் அபாட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டெம்பா பெளமா 38, டி காக் 28 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், 3-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பெளமா 119 பந்துகளில் அரை சதமடித்தார். அவரைத் தொடர்ந்து டி காக் 70 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
இதன்பிறகு வேகமாக ஓட்டங்கள் சேர்த்த டி காக் 72 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பீட்டர் நெவில் ஸ்டெம்பிங் வாய்ப்பை கோட்டைவிட்டதால் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினார். தொடர்ந்து அசத்தலாக ஆடிய அவர் 139 பந்துகளில் சதத்தை எட்டினார்.
தென் ஆப்பிரிக்கா 276 ரன்களை எட்டியபோது டி காக் ஆட்டமிழந்தார். அவர் 143 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து ஹேஸில்வுட் பந்துவீச்சில் போல்டு ஆனார். டி காக்-பெளமா ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் சேர்த்தது.
இதையடுத்து வெர்னான் பிலாண்டர் களமிறங்க, டெம்பா பெளமா 74 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அறிமுக வீரர் மென்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை பதிவு செய்தார் மென்னி.
பின்னர் வந்த மகாராஜ் 1 ஓட்டங்களிலும், கைல் அபாட் 3 ஓட்டங்களிலும் வெளியேற, அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த பிலாண்டர் 28 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 100.5 ஓவர்களில் 326 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட் 6 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி ஓட்டங்கள் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஜோ பர்ன்ஸின் விக்கெட்டை இழந்தது.
இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்தார் உஸ்மான் கவாஜா. அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்தது. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 45 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அபாட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் களமிறங்க, உஸ்மான் கவாஜா 91 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இது அவருடைய 9-ஆவது அரை சதமாகும். ஆஸ்திரேலியா 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. கவாஜா 56, ஸ்மித் 18 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கைல் அபாட் 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு ஆஸ்திரேலியா இன்னும் 120 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா வசம் உள்ளது.
4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தும்பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறவும், தொடரைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின்போது மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
