South Africa player diviliers retires from cricket

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் (34) யாரும் எதிர்பாராத வகையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் ‘வீடியோ’ மூலம் பேசிய அவர், "நான் மிகவும் சேர்ந்துபோய் விட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். 

உடனடியாக அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இது கடினமான முடிவு தான். நீண்ட சிந்தனைக்கு பிறகே இந்த முடிக்கு வந்தேன். அதுவும் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது விலக வேண்டும் என்று விரும்பினேன். 

இவ்வளவு காலம் விளையாடிவிட்டேன். இனி மற்றவர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான அபாரமான டெஸ்ட் வெற்றிகளுக்கு பிறகு இதுதான் ஓய்வு பெறுவதற்குரிய நேரமாகும்.

வேறு லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் அதிகமாக சம்பாதிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. தொடர்ச்சியாக விளையாடி நான் களைத்து போய்விட்டேன் என்பதே உண்மை. 

இதுவரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. உள்நாட்டில் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.