இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 340 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக் கண்டு தெறிக்கவிட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 96.2 ஓவர்களில் 335 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியில் ஆம்லா 78 ஓட்டங்கள், டி காக் 68 ஓட்டங்கள், பிலாண்டர் 54 ஓட்டங்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர், முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 51.5 ஓவர்களில் 205 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 78 ஓட்டங்கள் சேர்த்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டானர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கேசவ் மகாராஜ், கிறிஸ் மோரீஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 104 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியில் ஆம்லா 87 ஓட்டங்கள், டீன் எல்கர் 80 ஓட்டங்கள், கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 63 ஓட்டங்கள், பிலாண்டர் 42 ஓட்டங்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்னையடுத்து 474 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4-வது நாளான நேற்று 44.2 ஓவர்களில் 133 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக அலாஸ்டர் குக் 42 ஓட்டங்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் வெர்னான் பிலாண்டர், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டதற்கு தக்க பதிலடி கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கிறது தென் ஆப்பிரிக்கா.