south africa former skipper smith opinion about de villiers retire

இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது போன்றது, தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இல்லாதது என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்க அணிக்காக 15 ஆண்டுகள் ஆடியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்லாது, நாடு பேதமின்றி உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள வீரர் டிவில்லியர்ஸ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவதால் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படுகிறார்.

ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார் டிவில்லியர்ஸ். ஐபிஎல் 11வது சீசனில் அவர் இருக்கும் பெங்களூரு அணி, பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஐபிஎல்லுக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் திடீரென அறிவித்தார். இது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்க வீரர்கள் மற்றும் கிரிக்கெட் உலகிற்கே பெரும் அதிர்ச்சியை அளித்தது. 

அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்னதாக அவர் ஓய்வு அறிவித்தது, அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமல்லாது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது. 

இந்நிலையில், டிவில்லியர்ஸின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஸ்மித், டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு உலக கோப்பை வரை ஆடுவார் என நினைத்தேன். அவரது ஓய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி, கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. டிவில்லியர்ஸ் அவுட்டாகிவிடாமல், இன்னும் ஆடினால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கும் அளவுக்கு அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை அளிக்க கூடியவர் டிவில்லியர்ஸ். தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இல்லாதது, இந்திய அணியில் கோலி இல்லாதது போன்றது என ஸ்மித் தெரிவித்தார்.