தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அசத்தலான வெற்றிப் பெற்றது.

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலண்டனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 103.2 ஓவர்களில் 353 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 58.4 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 79.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் 492 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

டீன் எல்கர் 72 ஓட்டங்கள், டெம்பா பெளமா 16 ஓட்டங்களுடம் களத்தில் இருந்தனர். கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பெளமா 32 ஓட்டங்களில் வீழ்ந்தார்.

பின்னர் களம்புகுந்த வெர்னான் பிலாண்டர் டக் அவுட்டாக, கிறிஸ் மோரீஸ் களம்புகுந்தார்.
இதனிடையே டீன் எல்கர் 149 பந்துகளில் சதமடித்தார். அந்த அணி 205 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் மோரீஸ் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மொயீன் அலி வீசிய 76-வது ஓவரின் 5-வது பந்தில் டீன் எல்கர் 228 பந்துகளில் 136 ஓட்டங்கள் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் காகிசோ ரபாடா ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு 78-வது ஓவரை வீசிய மொயீன் அலி, முதல் பந்தில் மோர்கலை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்ஸ் 77.1 ஓவர்களில் 252 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், ஜோன்ஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.