தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து மோதும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் ஆட்டம் ஆக்லாந்து நகரில் இன்று தொடங்கியது.
நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி, டி20 ஆட்டத்துக்குப் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் விளையாடவுள்ளது.
நியூஸிலாந்து அணி, இந்த சீசனில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியோ 5-0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற நிலையில் நியூஸிலாந்து அணியை சந்திக்கிறது.
நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரரான மார்ட்டின் கப்டில் விளையாடவில்லை. அதனால் கேப்டன் வில்லியம்சனுடன் கிளன் பிலிப்ஸ் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
மிடில் ஆர்டரில் காலின் மன்றோ, டாம் புரூஸ், கோரே ஆண்டர்சன், காலின் டி கிராண்ட்ஹோம், லுக் ரோஞ்சி என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் டிம் செளதி, டிரென்ட் போல்ட், பென் வீலர் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் மிட்செல் சேன்ட்னரையும் நம்பியுள்ளது நியூஸிலாந்து.
தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்து மீண்டுள்ள டேவிட் மில்லர் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பது ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே தெரியவரும்.
அவர் உடற்தகுதி பெறும்பட்சத்தில் கடந்த தொடரில் கேப்டனாக இருந்த பர்ஹான் பெஹார்டியன் நீக்கப்படுவார்.
ஹஷிம் ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. மிடில் ஆர்டரில் டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸிஸ், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ், வேயன் பர்னெல், பெலுக்வாயோ, காகிசோ ரபாடா ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிரும் பலம் சேர்க்கின்றனர்.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்குத் தொடங்கியது.
