ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் 313 ஓட்டங்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறது தென் ஆப்பிரிக்கா அணி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்கா அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரரான எய்டன் மார்க்ரம் 216 பந்துகளில் 152 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். அந்த அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின்போது பந்தின் தன்மையை மாற்ற முயன்றபோது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் கேமராவில் சிக்கிக் கொண்டார். 

கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக அவருக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னணி வகிக்கிறது. கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி தீவிரம் காட்டி வருகிறது.

இதில், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர் 17.6-வது ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து, ஹசிம் ஆம்லா களம் கண்டார். அவர் நிதானமாக விளையாட, மறுபுறம் மார்க்ரம் அதிரடி காட்டினார். 27.4-வது ஓவரில் மார்க்ரம் அரை சதம் பதிவு செய்தார். 

இன்ந்த இணையைப் பிரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பல்வேறு உக்திகளைக் கையாண்டனர். அது 44.4-வது ஓவரில் பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆம்லா கேட்ச் ஆனார். அப்போது அவர் 27 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

அடுத்து டி வில்லியர்ஸ் களத்தில் குதித்தார். அவரும், மார்க்ரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 49.1-வது ஓவரில் சதம் பதிவு செய்தார் மார்க்ரம். இது இந்தத் தொடரில் அவர் பதிவு செய்த 2-வது சதம் ஆகும். ஓட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் இது இவருக்கு 4-வது சதம். 71-ஆவது ஓவரில் 150 ஓட்டங்களை கடந்த அவர், அதே ஓவரில் பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் மிட்செல் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த கேப்டன் ஃபாப் பிளெஸ்ஸிஸ் டக் அவுட் ஆனார். டி வில்லியர்ஸ் 69 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரபாடாவும் ரன்கள் எதுவுமின்றி பெவிலியன் திரும்பினார்.  பவுமா 25 ஓட்டங்கள், குவிண்டன் டி காக் 7 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக பட் கம்மின்ஸ் 19 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையும், சாயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நாதன் லயன் 1 விக்கெட்டை சாய்த்தார்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.