பாகிஸ்தான் அணியின் வாரிசு வீரர் உஸ்மான் காதீர், ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுவதில் ஆர்வமாக உள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நாளுக்காக காத்திருக்கிறார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் காதீர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இவரது மகன் உஸ்மான் காதீர். இவர் பாகிஸ்தான் அணியில் சில தொடர்களில் இடம்பெற்றிருந்தும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டிருந்தார். 

பாகிஸ்தான் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்த உஸ்மான் காதீருக்கு ஆஸ்திரேலிய அணி வாய்ப்பு வழங்கியது. அவரும் திறமையை நிரூபித்தார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணி பயிற்சி போட்டியில் ஆடியது. 

அந்த அணியில் இடம்பெற்றிருந்த உஸ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லெக் ஸ்பின், கூக்ளி ஆகிய பந்துகளை அருமையாக வீசினார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிக ஆக்டிவிடி விசாவில் தான் தங்கியுள்ளார். தனக்கு ஆட வாய்ப்பளித்த ஆஸ்திரேலிய அணியிலேயே தொடர்ந்து ஆட விரும்பும் உஸ்மான், திறமையின் அடிப்படையில் சிறப்பு விசாவிற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளார். அந்த விசா கிடைத்துவிட்டால், ஆஸ்திரேலியாவிலேயே தங்கி அந்த நாட்டு அணிக்காக அவர் ஆடலாம். 

2020 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுவதே தனது இலக்கு என உஸ்மான் காதீர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு முன்னதாக ஒருநாள் அல்லது டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக அதை ஏற்று தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் பேசியுள்ள உஸ்மான் காதீர், எனது தந்தையிடம் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட விரும்பும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால் அவர் பாகிஸ்தான் அணிக்காக ஆட பணித்தார். ஆனால் நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியில் ஆட வாய்ப்பே கிடைக்கவில்லை. எப்போதுமே பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் எனக்கு ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. நானும் திறமையை நிரூபித்தேன். இந்நிலையில், தற்போது எனது தந்தையும் எனது விருப்பத்திற்கு இசைவு தெரிவித்துவிட்டார் என உஸ்மான் காதீர் தெரிவித்துள்ளார்.