ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த முறை, சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.

மீண்டும் சென்னை மைதானத்தில் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்க உள்ளதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இதற்கிடையே சென்னை அணி வீரர்கள் சென்னை வந்துவிட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தோனி தலைமையில், ரெய்னா, ஜடேஜா, முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்களை கொண்ட சென்னை அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் நட்சத்திர விடுதியில் பேசிய தோனி, நெகிழ்ச்சியில் கண் கலங்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

2 ஆண்டு கால தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியுடன் பேசினார் தோனி. அதேசமயம் கடந்த 2 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இல்லாததை நினைவுகூர்ந்து பேசினார். கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்துவிடுவோம் என்று கூறியபோது கண்ணீர்விட்ட தோனி, எதிர்காலத்தை நோக்கி வெற்றியுடன் நடைபோட வேண்டும் என்றார்.

நெகிழ்ச்சியில் தோனி கண் கலங்கியபோது, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சுரேஷ் ரெய்னா தண்ணீர் கொண்டுவந்து தோனிக்கு கொடுத்து அவரை ஆற்றுப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.