Sindhu in the Premier Badminton starting today Saina conflict ...
பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியின் மூன்றாவது சீசன் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்றுத் தொடங்குகிறது.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பிரீமியர் பாட்மிண்டன் லீக் என்னும் பிபிஎல் போட்டியின் மூன்றாவது சீசன் இன்றுத் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸின் பி.வி.சிந்துவும், அவாதே வாரியர்ஸின் சாய்னா நெவாலும் மோதுகின்றனர்.
இந்தப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர், வீராங்கனையும், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 8 பேரும், 9 ஒலிம்பிக் பதக்க வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.
இந்த சீசனில் புதிதாக அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த அணிகளின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் 5 நகரங்களில் அடுத்த 23 நாள்களுக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஒருநாளில் இரு அணிகள் மோதும். அந்த அணிகளுக்கு இடையே ஆடவர், மகளிர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 5 பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும். இப்போட்டியின் இறுதிச்சுற்று ஹைதராபாதில் நடைபெறவுள்ளது.
உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் சிந்து, இதுவரை மூன்று முறை சாய்னாவை நேருக்கு நேர் சந்தித்து அதில் 2 வெற்றிகள், ஒரு தோல்வியை பெற்றுள்ளார்.
அந்த ஒரு தோல்வியை, கடந்த மாதம் நடைபெற்ற சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அடைந்திருந்தார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, முதல் ஆட்டம் குறித்து சிந்து, "அவாதே வாரியர்ஸ் அணிக்கு எதிரான எங்களது முதல் ஆட்டத்தை விளையாட ஆர்வத்துடன் உள்ளேன். இது சாய்னாவுக்கு எதிரான எனது போட்டி மட்டுமல்ல.
இப்போட்டியில் இருக்கும் அனைத்து அணிகளுமே பலம் வாய்ந்ததாக இருப்பதால், இந்த சீசன் நல்லதொரு போட்டியாக இருக்கும்" என்றுத் தெரிவித்தார்.
