சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

சீனாவின் புஜெள நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் சிந்து 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்வான் ஜங்கை தோற்கடித்தார். சிந்து தனது காலிறுதியில் சீனாவின் ஹீ பிங்ஜியாவை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் அஜய் ஜெயராம் 20-22, 21-19, 21-12 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் வெய் நேனை தோற்கடித்தார். ஜெயராம் தனது காலிறுதியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியனுமான சீனாவின் சென் லாங்கை சந்திக்கிறார்.

அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 16-21, 9-21 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் மார்க் ஸ்வைப்லரிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.