தனது பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய விராட் கோலியை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய விராட் கோலியை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை கோலி முறியடித்துவருகிறார். அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த கோலி, ஒருநாள் போட்டிகளில் விரைவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் கோலி, பொறுமையும் நிதானமும் போதாவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது சரி. ஆனால் பொதுவெளியிலும் பொறுமையில்லாமல் பேசுவது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.
அதுமாதிரியான ஒரு சர்ச்சையில் தற்போதும் கோலி சிக்கியுள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராத் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கோலி, என்னைப் பொறுத்தவரை இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்? நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள் என்று காட்டமாக கோலி பதில் அளித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மற்ற நாட்டு வீரர்களை இந்திய ரசிகர்கள் ரசிப்பது என்பது புதிதல்ல. பிரயன் லாரா, முரளிதரன், சங்ககரா, ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், ஷேன் வார்னே உள்ளிட்ட வீரர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோல சச்சின், தோனி ஆகிய இந்திய வீரர்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் என்பது நாடுகளை கடந்து ரசிப்பது. எனவே எந்த நாட்டினரும் எந்த நாட்டு வீரரையும் ரசிப்பது இயல்பு. அதை பொதுவெளியில் சொன்னதற்கு கோலி இப்படி ரியாக்ட் செய்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோலியின் கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நியாயமான முறையில் எப்போதுமே சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த், கோலியின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவரை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் ஏற்கனவே பதிவிட்டிருந்த சித்தார்த், கிங் கோலி என்ற அடைமொழியை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால், இதே விமர்சனத்துக்கு டிராவிட் எப்படி ரியாக்ட் செய்திருப்பார் என்று நினைத்து பார்த்து உங்களுக்கு நீங்களே பாடம் கற்பித்துக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளுக்கு ரியாக்ட் செய்யுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து முட்டாள்தனமான வார்த்தைகள் வந்துள்ளன என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஒரு எடுத்துக்காட்டுடன் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் சித்தார்த். அதில், நிறைய ரசிகர்கள் தென்னிந்திய திரைப்படங்களில் பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் நானெல்லாம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களை மட்டும்தான் பார்த்து ரசிப்பேன் என்று கூறுகின்றனர். அதுபோன்ற பல விமர்சனங்களை நான் கேட்டுள்ளேன். அவற்றிற்கெல்லாம் டிராவிட் போலத்தான் ரியாக்ட் செய்திருக்கிறேன் என்று மீண்டும் கோலியை சாடியுள்ளார்.
