சையத் முஷ்டாக் அலி தொடரில் சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி சதமடித்து மிரட்டினார். 

மும்பை மற்றும் சிக்கிம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரஹானே, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ரஹானே மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் முறையே 11 மற்றும் 10 ரன்களில் வெளியேறினர். 

22 ரன்களுக்கு மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும் சுர்யகுமார் யாதவும் இணைந்து மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் மிரட்டலாக ஆடினார். 55 பந்துகளில் 15 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 147 ரன்களை குவித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். சூர்யகுமார் யாதவும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 213 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் அவுட்டான அதே ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரும் வெளியேறினார். 

ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 258 ரன்களை குவித்தது. 259 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிக்கிம் அணி, வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 154 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. 

147 ரன்கள் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட்டின்(128 ரன்கள்) சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். ஒரு டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற மைல்கல்லையும் ஷ்ரேயாஸ் எட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிக்கிம் வீரர் டாஷி பின்ஸ்டோவின் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசி சாதனை படைத்தார் ஷ்ரேயாஸ்.