சானியா மிர்சாவிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் முறைதவறி நடக்க முயன்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சானியாவின் கணவர் சோயப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளார். 

ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவருகிறார். இந்நிலையில், சோயப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த வங்கதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியில் சபிர் ரஹ்மான் மிகவும் சர்ச்சைக்குரிய வீரர். 26 வயதான சபிர் ரஹ்மான், ரசிகரை தாக்கியது, முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டது, வங்கதேச பிரீமியர் லீக் போட்டிகளின் போது அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி ஹோட்டலுக்கு பெண் ஒருவரை அழைத்து சென்றது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியவர். 

இவ்வாறு அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த சபிர் ரஹ்மான், சானியா மிர்சாவிடம் தவறாக நடக்க முயன்றதாக சோயப் மாலிக் புகார் அளித்துள்ள நிலையில், அது உண்மை என தெரியவந்தால், சபிர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.