கோலி ஆடாதது அணியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாகவும் ஷிகர் தவான் துணை கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறார். ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்கள், இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது தங்களது அணிக்கு சாதகமாக இருக்கும் என நினைத்தனர். 

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி உள்ளிட்ட சில வீரர்கள், கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி முழு பலத்துடன் திகழ்வதாகவும் கோலி இல்லாதது பெரிய பாதிப்பாக இருக்காது எனவும் தெரிவித்தனர். 

அதேபோலவே ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்தனர். லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது. 

ரோஹித் சர்மா சிறப்பாக அணியை வழிநடத்திவருகிறார். அவரது கேப்டன்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை. இந்த தொடரில் இதுவரை ஷிகர் தவான் தான் அதிகமான ரன்களை குவித்துள்ளார். 327 ரன்களை குவித்துள்ளார் தவான். 

இந்த தொடரில் துணை கேப்டனாக செயல்பட்டுவரும் தவான், கோலி அணியில் ஆடாதது மற்றும் தனது துணை கேப்டன் பொறுப்பு ஆகியவை குறித்து பேசியுள்ளார். கோலி குறித்து பேசிய தவான், கோலி அணியில் இல்லாதது அணியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. முக்கியமான இந்த தொடரில் நான் ரன்களை குவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து வீரர்களுமே சிறப்பாக ஆடிவருகின்றனர். 

துணை கேப்டன் பொறுப்பு எனக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை. அதனால் எனது ஆட்டமும் பாதிக்கப்படவில்லை. உண்மையாகவே அழுத்தங்கள் கேப்டன் ரோஹித் மீதுதான். நான் எப்போதும் போல எனது இயல்பான ஆட்டத்தையே ஆடிவருகிறேன் என்றார் தவான்.

இந்திய அணியின் கேப்டனும் அணியின் முக்கியமான மற்றும் நட்சத்திர வீரருமான கோலியை மட்டுமே சார்ந்து இந்திய அணி இருக்கிறதோ என்ற எண்ணம் பரவலாக இருந்தது. ஆனால் கோலியை மட்டுமே சார்ந்து இந்திய அணி இல்லை என்பதை ரோஹித் தலைமையிலான இந்திய அணி நிரூபித்துவிட்டது.