தான் ஆடியதிலேயே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தான் மிகவும் சுயநலவாதி என முன்னாள் சுழல் மன்னன் ஷேன் வார்னே பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே “நோ ஸ்பின்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் சில பகுதிகளை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

அதில், நான் ஆடியதிலேயே மிகவும் சுயநலவாதி ஸ்டீவ் வாக் தான். அவர் 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை தவிர வேறு எதுவுமே அவருக்கு முக்கியமில்லை என்று காட்டமாக எழுதியுள்ளார். 

மேலும், 1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தன்னை வேண்டுமென்றே ஓரங்கட்டியது குறித்த மனவேதனையையும் பதிவிட்டுள்ளார். அதுதொடர்பாக எழுதியுள்ள ஷேன் வார்னே, 1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் வாக் கேப்டன், நான் துணை கேப்டன். இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் நான் சரியாக பந்துவீசவில்லை. 

எனவே என்னை 4வது போட்டியிலிருந்து நீக்க முடிவெடுத்த ஸ்டீவ் வாக், அவருக்கும் எனக்குமான சந்திப்பை நடத்தினார். அப்போது, அணியின் பயிற்சியாளர் ஜெஃப் மார்ஷ் என்னிடம் வந்து ஷேன், நீ அடுத்த போட்டியில் ஆடமுடியாது என்று கூறினார். நான், ஏன் என கேட்டேன். அதற்கு நீ நன்றாக பந்து வீசுவதுபோல் தெரியவில்லை, அதனால்தான் என்றார். நீங்கள் சொல்வது சரிதான், எனது தோள்பட்டை காயம் முழுவதுமாக குணமடைந்துவிடும் என எண்ணினேன். ஆனால் நீண்ட நாட்கள் ஆகிறது. அதனால்தான் சரியாக வீசமுடியவில்லை. நிதம் மெதுவாகத்தான் வரும். கவலையில்லை என்றேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அப்போது ஆலன் பார்டர்(ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்) எனக்கு ஆதரவாக பேசினார். ஷேன் வார்னே அணிக்கு செய்த நன்மைகளை கருதி அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆலன் கூறினார். எனினும் ஸ்டீவ் வாக் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், ஸ்டீவ் வாக், உங்களது சிந்தனையை பாராட்டுகிறேன் ஆலன். ஆனால் ஷேன் வார்னே இந்த போட்டியில் ஆடப்போவதில்லை. நான் இந்த முடிவை தைரியமாகவே எடுக்கிறேன் என பதிலளித்துவிட்டார். நான் அந்த போட்டியில் ஆடவில்லை. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. அணிக்காக எனது பங்களிப்பை அளிக்க முடியவில்லை என்ற வேதனை எனக்கு இருந்தது. நான் நன்றாக ஆடியிருக்க வேண்டும். எனினும் நான் நன்றாக ஆடவில்லை என்று என்னை அணியை விட்டு நீக்குவதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நான் நல்ல நண்பராக கருதிய ஸ்டீவ் வாக் என்னை கைவிட்டுவிட்டார். அவருக்கு பல தருணங்களில் நான் ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால் அவர் என்னை கைவிட்டுவிட்டார் என்பதே வேதனை.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் சில வீரர்கள் ஸ்டீவ் வாக்கின் கேப்டன்சி, பீல்டிங் வியூகம் குறித்து என்னிடம் விமர்சனம் செய்தனர். நான் அப்போது கூட ஸ்டீவ் வாக்கிற்கு ஆதரவாகவே பதில் அளித்தேன். ஆனால் அவர் எனக்கு கைமாறு செய்யவில்லை. கேப்டனானவுடன் ஸ்டீவ் வாஹ் முற்றிலும் வேறு ஒரு மனிதராகி விட்டார். அவர் என்னை நீக்கியதால் அல்ல. நான் சரியாக ஆடவில்லை எனில் என்னை நீக்குவது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் வெறும் என் ஆட்டம் மட்டுமே அங்கு விஷயமல்ல. அதைத்தாண்டியும் சில விஷயங்கள் இருந்தன என்பதுதான் முக்கியம் என மனவேதனையுடன் எழுதியுள்ளார்.