அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை குவித்த தன்னால், இந்தியாவிடம் சோபிக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே ஒப்புக்கொண்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது சுழலால் எதிரணி வீரர்களை மிரட்டியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் இலங்கை சுழல் ஜாம்பவான் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்னே இரண்டாமிடத்தில் உள்ளார். 

ஷேன் வார்னே தனது லெக் ஸ்பின்னால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தவர். 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக வார்னே ஆடியுள்ளார். தனது சுழலால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். 

மற்ற அணிகளுக்கு எதிராக அதிகமான விக்கெட்டுகளை குவித்திருந்தாலும் இந்திய அணிக்கு எதிராக அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 43 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஒரே ஒருமுறை மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னேவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது இந்திய அணி தான். 

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக தன்னால் சோபிக்க முடியாதது குறித்து ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சுயசரிதை குறித்து பேசிய வார்னே, அனைத்து அணிகளுக்கு எதிராகவும் நான் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தேன். ஆனால் இந்தியாவிற்கு எதிராக என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனாலும் அது எனக்கு வருத்தமாக இல்லை. ஏனென்றால் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன் என்னுடைய தோள்பட்டையிலும் விரல்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தேன். அதனால்கூட என்னால் சிறப்பாக பந்துவீச முடியாமல் போயிருந்திருக்கலாம். 

அதுமட்டுமல்லாமல் நான் ஆடிய காலத்தில் இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமணன், சேவாக் ஆகிய ஜாம்பவான்கள் இருந்தனர். அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். நான் என்னதான் சிறப்பாக பந்துவீசினாலும் அவர்கள் அதைவிட சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.