இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் திகழ்கின்றனர். ரோஹித் - தவான் ஜோடி சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். தொடக்க ஜோடியாக இதற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர்.

 

ரோஹித் - தவான் ஜோடி நிரந்தர தொடக்க ஜோடியாக திகழ்ந்தாலும் மாற்று தொடக்க வீரராக கேஎல் ராகுல் அணியில் இருந்தார். ஆனால் ராகுல் ஒருநாள் போட்டிகளில் அதிகம் களமிறக்கப்படுவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர தொடக்க வீரராக களமிறங்கி வந்த ராகுல், கடந்த ஆண்டில் இங்கிலந்து சுற்றுப்பயணம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் படுமோசமாக சொதப்பியதை அடுத்து, ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். 

பின்னர் இந்தியா ஏ அணியில் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். உலக கோப்பைக்கு முன்னதாக நடக்கும் கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை உலக கோப்பையில் மாற்று தொடக்க வீரராக களமிறக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் கவாஸ்கரோ, ராகுல், ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக்தான் சரியான மாற்று தொடக்க வீரர் என கருத்து தெரிவித்துள்ளார்.