ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச், ஷமியின் பந்துவீச்சில் காயமடைந்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி களத்தில் இருந்து வெளியேறினார். 

நேற்று முன் தினம் பெர்த்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம் மற்றும் ரஹானேவின் பொறுப்பான அரைசதத்தால் 283 ரன்கள் சேர்த்தது. 

43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். தொடக்கத்தில் இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகியோரின் பவுலிங்கில் திணறினாலும் பின்னர் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடினார். 

இஷாந்த் வீசிய 7வது ஓவரின் 5வது பந்தில் ஃபின்ச் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேட்ச் பிடித்திருக்கலாம். ஆனால் அந்த கேட்ச்சை தவறவிட்டதால் ஃபின்ச் தொடர்ந்து பேட்டிங் ஆடும் வாய்ப்பை பெற்றார். அதன்பிறகு சில பவுண்டரிகளை அடித்தார். 

ஃபின்ச் - மார்கஸ் ஹாரிஸ் தொடக்க ஜோடியை பிரிக்க முடியவில்லை. 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களை எடுத்த ஃபின்ச், சிறப்பாக ஆடிவர, ஷமியின் பவுன்ஸர் ஒன்று அவரது கையை பதம்பார்த்தது. அதில் ஏற்பட்ட காயத்தால் 25 ரன்களுடன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் ஃபின்ச். 

அதன்பிறகு மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், டிராவிஸ் ஹெட் ஆகிய நால்வரும் ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 41 ரன்களுடனும் டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 175 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.