நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
இந்த இரு அணிகளுக்கு இடையே மெல்போர்னில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் களமிறங்கினர்.
இதில் ஃபிஞ்ச் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் உரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காத வார்னர், பொறுமையாக ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கினார்.
ஸ்மித்தை தொடர்ந்து வந்த ஜார்ஜ் பெய்லி 23 ஓட்டங்கள் எடுக்க, அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். பின்னர் ஆடிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் மட்டும் 37 ஓட்டங்கள் எடுத்தார்.
மேத்தியு வேட் 14, ஃபாக்னர் 13 ஓட்டங்களில் வீழ்ந்தனர். இதனிடையே வார்னர் சதம் கடந்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 128 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 156 ஓட்டங்கள் எடுத்து அணியின் கடைசி வீரராக ஆட்டமிழந்தார்.
50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் ஸ்டார்க் மட்டும் ரன்கள் இன்றி களத்தில் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 265 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய நியூஸிலாந்து அணியில் கப்டில் மட்டும் அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் எடுத்தார்.
டாம் லதாம் 28, வில்லியம்சன் 13, காலின் டி 11, சேன்ட்னர் 15 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர். நிகோலஸ், வாட்லிங், செளதி, போல்ட் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
அடுத்தடுத்த விக்கெட் சரிவால் 36.1 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து. ஃபெர்குசன் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் பட்டத்தை டேவிட் வார்னர் தட்டிச் சென்றார்.
