இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டதால், வெற்றியடைய போகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. இந்த ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் எது என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, விரக்தியடைந்தது. கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஹர்திக் பாண்டியா மீதெல்லாம் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதால், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்கியது. 

முதல் இன்னிங்ஸில், 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, ரஹானே-கோலி ஜோடி சரிவிலிருந்து மீட்டெடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்தது. அதேபோல முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியை 161 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ததில் பெரும்பங்காற்றினார் பாண்டியா. 

பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டதால் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது ஆடிய இந்திய அணி 352 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, இங்கிலாந்து அணிக்கு 521 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 210 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில், இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ரஹானே-கோலி பார்ட்னர்ஷிப் தான் இந்த ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இருவரில் ஒருவர் விக்கெட்டை இழந்திருந்தால் கூட மொத்தமும் தலைகீழாக மாறியிருக்கும். ரஹானே-கோலியின் பார்ட்னர்ஷிப் தான் மற்ற வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா-கோலி பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என சேவாக் கூறியுள்ளார்.

சேவாக் கூறியிருப்பது மிக மிகச் சரிதான். முதல் இன்னிங்ஸில் கோலி-ரஹானே பார்ட்னர்ஷிப் அமையவில்லை என்றால், இந்த போட்டியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி, வெற்றி பெற்றிருக்கக்கூடும்.