sehwag convey childrens day greetings

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சமூக வலைதளங்களில் அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளை அதிரடியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

குழந்தைகள் தினமான இன்று நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி வீர மரணம் அடைந்த சிறுவன் ஷாகித் பாஜி ரூத்தின் கதையை தனது பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் ஷேவாக் பகிர்ந்துள்ளார். நெகிழ வைக்கும் இந்த பதிவு, ஷேவாக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஷேவாக்கின் பதிவு:

ஒடிசாவின் நிலகாந்த்பூரை சேர்ந்தவர், ஷாகித் பாஜி ரூத். இவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த இளம் வீரர். தனது 12-வது வயதில் இந்திய படகுக்கு காவலாக இருந்தார். அப்போது, அங்குவந்த பிரிட்டிஷ் படைகள், அவர்களை அந்த கரைக்கு கூட்டி செல்லும்படி ஷாகித்திடம் கூறினர். 

ஆனால் இந்த கூட்டத்தின் கொடூரத்தை முன்பே தெரிந்திருந்த ஷாகித், அவர்களின் கட்டளையை தைரியமாக மறுத்தார். தங்களை கூட்டி செல்ல மறுத்தால் கொன்று விடுவோம் என ஷாகித்தை மிரட்டினர். கொலை மிரட்டலுக்கும் ஷாகித் அஞ்சவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் வீரர்கள் ஷாகித்தின் பிஞ்சு தலையில் துப்பாக்கி முனையால் கொடூரமாக தாக்கினர். கீழே விழுந்த ஷாகித், அதற்கும் பயப்படாமல் துணிச்சலாக மீண்டும் எழுந்து நின்று நெஞ்சை நிமிரித்தி அவர்களை எதிர்த்து நின்றார்.

ஆத்திரமடைந்த மற்றொரு பிரிட்டிஷ் வீரர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் பிஞ்சு வயதில் தோட்டாக்களை நெஞ்சில் வாங்கி ஷாகித் நாட்டுக்காக வீர மரணம் அடைந்தார். 

இந்த சம்பவத்தில் ஷாகித்தின் நண்பர்களான லட்மண் மாலிக், நாடா மாலிக், பாகு சகு, குரேசி பிரதான் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஷாகித்து எவ்வளவு மரியாதை கொடுத்தாலும் போதாது என ஷேவாக் குறிப்பிட்டுள்ளார்.