scotland defeated england in odi
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
ஸ்காட்லாந்து சென்று ஒரே ஒரு ஒருநாள் போட்டியை மட்டும் இங்கிலாந்து அணி ஆடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததால், ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணி சற்றும் எதிர்பாராத அளவிற்கு ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர்கள் மேத்யூ கிராஸ் 48 ரன்களும் கைல் கோயட்ஸர் 58 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மூன்றாவதாக களமிறங்கிய மெக்லியோட் அதிரடியாக ஆடி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 140 ரன்களை குவித்தார்.

ஜார்ஜ் முன்சியும் தன் பங்கிற்கு 55 ரன்கள் எடுத்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்களை குவித்தது.
கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து அணி 371 ரன்களை குவித்ததே இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. 372 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சதமடித்தார். 105 ரன்களுக்கு அவர் அவுட்டானார். அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட், இயன் மோர்கன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

மோயின் அலி 46 ரன்களும் பிளன்கெட் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வெற்றியை நெருங்கிய இங்கிலாந்து அணியால், வெற்றி பெறமுடியவில்லை. விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி பெற முடியாத நிலை உருவானது. 48.5 ஓவருக்கு 365 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. 372 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டி வந்து வெற்றியை நெருங்கியது. ஆனால் விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி சாத்தியப்படவில்லை.
ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
