ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை வீழ்த்த முடியும் என பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். உலகளவில் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும். போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றிக்காக வெறித்தனமாக ஆடும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் சர்வதேச தொடர்களை தவிர மற்ற போட்டிகளில் ஆடுவதில்லை. அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருசில போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு எகிறுகின்றன. கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றது. 

அதன்பிறகு ஆசிய கோப்பை தொடரில் தான் இரு அணிகளும் மோத உள்ளன. வரும் 15ம் தேதி ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 19ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. 

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரில் விராட் கோலி இல்லாததால் பாகிஸ்தான் அணி சற்று ஆறுதலாக உள்ளது. எனினும் இந்திய அணி ரோஹித் சர்மா, தவான், ராகுல், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் வலுவாக உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் அந்த அணி சார்பில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவுடனான போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்தியாவிற்கு எதிரான போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்தியாவிற்கு எதிராக ஆடுவதற்கு தயாராக உள்ளோம். இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே அந்த அணியை வீழ்த்தி உத்வேகத்துடன் அனைத்து போட்டிகளையும் எதிர்கொள்ள உள்ளோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளங்கள் மிகவும் மெதுவாக இருக்கும் என்பதால், ஸ்பின் பவுலிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்களுக்கு மேலாக இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்க முயல்வோம். அப்படி 300 ரன்களை நாங்கள் எட்டிவிட்டால் எங்கள் பவுலர்கள் இந்திய அணியின் விக்கெட்டுகளை சரித்துவிடுவர் என சர்ஃபராஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.