ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் நடந்த வாக்குவாதங்கள் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என வென்றது.

பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் எதிரணி வீரர்களை மனரீதியாக தாக்கி, அதன்மூலம் வீழ்த்த முயல்வர். அதற்காக சில வார்த்தைகளை உதிர்ப்பது, வேண்டுமென்றே சீண்டுவது, கிண்டலடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இதுபோன்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிகர் அவர்களே. வேறு எந்த அணியினரும் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை நெருங்கக்கூட முடியாது. 

வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வர். ஆனால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய முக்கியமான வீரர்கள் தடையில் இருப்பது அந்த அணியை கடுமையாக பாதித்துவிட்டது. தற்போது டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பெரிதாக சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கான அந்த துடிப்பும் வேகமும் வெற்றி தீவிரமும் முன்புபோல் இல்லை. இது பொதுவாக இதுவரை இருந்த ஆஸ்திரேலிய அணியை போலவே இல்லை என்று கூறலாம். 

ஆனால் அந்த அணியின் ஸ்லெட்ஜிங் எந்த வகையில் இருக்கிறது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய சர்ஃப்ராஸ் அகமதுவிடம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்லெட்ஜிங் குறித்தும் அந்த அணியின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, பழைய ஆஸ்திரேலிய அணியைப் போல பெரிய சம்பவங்களோ வார்த்தை பரிமாற்றங்களோ பெரிய சர்ச்சைகளோ இல்லை. ஆனால் முற்றிலும் இல்லை என்று கூறிவிட முடியாது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நாதன் லயன் ரொம்ப பேசுகிறார். துபாயில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணியை சுழல் பந்திலேயே காலி செய்வேன் என்று கூறினார். பின்னர் இரண்டாவது போட்டியில் என்னிடம் அணிக்காக ஆடுகிறாயா? அல்லது உன் சதத்துக்காக ஆடுகிறாயா? என்று கேட்டு சீண்டினார். நாங்களும் அமைதியாக இருக்கவில்லை; அவ்வப்போது பதிலடிகளை கொடுத்தோம். லயனின் பந்தில் சிக்ஸர் அடித்து விட்டு, உன் இடத்தில் நான் இருந்தால் பேட்ஸ்மேன் மற்றொரு சிக்ஸர் அடிக்கவேண்டும் என்று விரும்புவேன் என்று லயனிடம் கூறியதாகவும் சர்ஃப்ராஸ் தெரிவித்தார்.