பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹஃபீஸின் பவுலிங் ஸ்டைலை கிண்டல் செய்த நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லரை பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கடுமையாக எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான டி20 தொடரை 3-0 என வென்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அணி வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜார்ஜ் ஒர்க்கர் 1 ரன்னில் வெளியேறினார். கோலின் முன்ரோ 29 ரன்களிலும் கேப்டன் வில்லியம்சன் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ரோஸ் டெய்லர் 80 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். டாம் லாதம் 68 ரன்களை குவித்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 266 ரன்களை எடுத்தது.

267 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவருக்கே 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸின்போது, பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹஃபீஸ் பந்துவீசும்போது அவரது பந்துவீச்சை நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் கிண்டல் செய்தார். ஹஃபீஸின் பவுலிங் ஆக்‌ஷனை செய்துகாட்டி கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது நடுவரிடம் நீண்டநேரம் முறையிட, பின்னர் ஹஃபீஸ், சர்ஃப்ராஸ் மற்றும் டெய்லர் ஆகிய மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவானது. பிறகு நடுவர் சமாதானப்படுத்தி வைத்தார்.

இதையடுத்து போட்டி முடிந்ததும் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, டெய்லர் சிறந்த தொழில்முறை கிரிக்கெட் வீரர். பேட்டிங் செய்வது மட்டும்தான் அவரது வேலை என்பதால் அவர் அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பந்துவீச்சாளரை அவமதிக்கும் விதமாக அவர் செயல்பட்டது சரியானதல்ல. அது ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் செயலும் அல்ல. இரண்டு, மூன்று முறை அவர் இப்படி செய்தார். பந்துவீச்சு பற்றி பேசுவது நடுவர்களின் வேலை. ஹஃபீஸின் பந்துவீச்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. டெய்லர் தேவையில்லாமல் பிரச்னையை கிளப்புகிறார் என்றார்.