சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி கேரள அணி வாகை சூடியது. 
 
சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

 இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு கேரள அணிக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜிதின் எம்.எஸ். கோலடித்தார். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பெங்காலுக்கு கோல் வாய்ப்பு வழக்காத கேரளத்தின் தடுப்பாட்டம் பலமாக இருக்க, முதல் பாதி முடிவில் கேரளம் 1-0 என முன்னிலையில் இருந்தது.
 
பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணியின் கைகளும் ஓங்கியிருக்க, 68-வது நிமிடத்தில் ஆட்டத்தை சமன் செய்தது பெங்கால். அந்த அணியின் கோலை ஜிதென் முர்மு அடித்தார். 

இந்நிலையில், நேரம் முடிவடைய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, ஆட்டம் தொடர்ந்தது. 117-வது நிமிடத்தில் விபின் தாமஸ் தலையால் முட்டி கோலடிக்க, கேரளம் 2-1 என முன்நிலை பெற்றது. 

தொடர்ந்து போராடிய பெங்காலுக்கும் கோல் வாய்ப்பு கிடைக்க, மீண்டும் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. 

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் வாய்ப்பில் கேரளம் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
 
பெனால்டி வாய்ப்பில் பெங்கால் அணியில் அங்கித் முகர்ஜி மற்றும் நாபி ஹுசைன் ஆகியோர் அடித்த முதல் இரு பந்துகளை கேரள கோல் கீப்பர் மிதுன் அற்புதமாக தடுத்தார். 

கேரள அணியில் ராகுல் ராஜ், ஜிதின் கோபாலன், ஜஸ்டின் ஜார்ஜ், சீசான் ஆகியோர் கோலடித்தனர். இதில் கேரள அணியின் வெற்றிக்கான கோலை சீசான் முர்மு அடித்தார்.
 
ஆறாவது முறையாக சந்தோஷ் கோப்பை பட்டம் வென்ற கேரளம், கடைசியாக 2004-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.