இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் ஆஸ்திரேலிய தொடர். அதனால் உலக கோப்பைக்கான அணியில் பரிசீலிக்கப்படும் சில வீரர்களை பரிசோதித்து உலக கோப்பை அணியில் இணைப்பது குறித்த முடிவெடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு.

அந்த வகையில், ஆஸ்திரேலிய தொடரில் ராகுல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டியில் விஜய் சங்கருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. ராகுலும் ரிஷப் பண்ட்டும் அணியில் இருந்தனர். 

தவானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த ராகுல், அரைசதம் அடித்து சஸ்பெண்டுக்கு பிறகு செம கம்பேக் கொடுத்தார். சில அபாரமான ஷாட்டுகளை ஆடி கவனத்தை ஈர்த்தார் ராகுல். ரிஷப் பண்ட் துரதிர்ஷ்டவசமாக 3 ரன்களில் ரன் அவுட்டானார். இவர்களை உலக கோப்பை அணியில் எடுக்கும் விதமாக அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதை கேப்டன் கோலியே தெரிவித்திருக்கிறார். 

அதேநேரத்தில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், விஜய் சங்கரை கண்டிப்பாக ஆடும் லெவனில் எடுத்திருக்க வேண்டும். விஜய் சங்கரை அணியில் சேர்த்துவிட்டு, சாஹலுக்கு பதிலாக மார்கண்டேவை மட்டும் அணியில் எடுத்திருக்கலாம். 

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், தவான் மற்றும் விஜய் சங்கரை எடுக்காதது பெரும் தவறு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் கருத்து தெரிவித்துள்ளார்.