நான் எவ்வளவு மோசமான பேட்ஸ்மேன் என்பதை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்ஜய் பாங்கர் எனக்கு புரிய வைத்தார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) "சிறந்த கிரிக்கெட் வீரர்', "சிறந்த டெஸ்ட் வீரராக அண்மையில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அஸ்வின். அப்போது அவர் கூறியதாவது:

2016-ம் ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும், அதிகமாக ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. எல்லாம் தானாகவே அமைந்தது. தொடர் பயிற்சி, இடைவிடாத முயற்சி ஆகியவையே இந்தச் சாதனைகளுக்கு காரணம் என நினைக்கிறேன். குடும்பத்திற்காக அதிகமாக நேரம் செலவிட வேண்டும் என நினைத்தேன்; திட்டமிட்டேன். ஆனால் செலவிட முடியவில்லை.

தோனி மிகப்பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர், மிகச் சிறந்த வீரரான அவரது தலைமையில் விளையாடியது பெருமையான தருணங்கள். கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியிருப்பது, அவரின் தனிப்பட்ட முடிவு. அது குறித்து எந்தக் கருத்தும் நான் கூற முடியாது. தோனியின் இந்த முடிவை நாம் மதிக்க வேண்டும்.

தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேமில்லை. அதற்காக விராட் கோலியின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியுமா? டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்ததன் மூலம் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை கோலி நிரூபித்துள்ளார்.

கோலி ஒன்றும் சளைத்தவர் இல்லை. இப்படித்தான், கங்குலி கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது இனி இந்திய அணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், திராவிட், கும்ப்ளே அதைத் தொடர்ந்து தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றிகளை வசமாக்கியது. அதுபோலவே கோலியின் தலைமையிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்படும்.

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி இந்தாண்டு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இலங்கையில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழத்தியுள்ளேன், இம்முறையும் அதேபோன்று பந்து வீசுவேன்.

பின்பு, தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் சவாலானதாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறை அவர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றனர். எனவே, தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடுவது கடுமையான சவாலாக இருக்கும்.

எனினும், 2014 ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இருந்து வெளிநாட்டு ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசி வருகிறேன். அதனை தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களிலும் தொடருவேன்.

நான் எவ்வளவு மோசமான பேட்ஸ்மேன் என்பதை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்ஜய் பாங்கர் எனக்கு புரிய வைத்தார். அவர் எதையுமே வெளிப்படையாக பேசக் கூடியவர். அவர் சொல்லித்தான் நான் எவ்வளவு மோசமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரிந்தது. பின்பு, சஞ்ஜய் பாங்கர் என் குறைகளை கண்டறிந்து தவறுகளை கலைந்து பேட்டிங் பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தார்.

தீவிர பயிற்சிகளுக்கு பின்பு முன்பை விட என்னுடைய பேட்டிங் தரம் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.