நான்காவது ஒருநாள் போட்டியில் சாமுவேல்ஸை வம்புக்கு இழுத்த கலீல் அகமதுவிற்கு நேற்றைய கடைசி போட்டியில் பதிலடி கொடுத்தார் சாமுவேல்ஸ்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. இந்த தொடரின் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த 378 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 153 ரன்களுக்கே அந்த அணி ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸை வீழ்த்திய கலீல் அகமது அவரை நோக்கி ஆக்ரோஷமாக கத்தி வழியனுப்பி வைத்தார். ஐசிசி விதிகளை மீறி களத்தில் ஒழுங்கீனமாக நடந்த அந்த நடத்தையின் காரணமாக கலீலுக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கிய ஐசிசி, இளம் வீரர் என்பதால் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு நிறுத்திக்கொண்டது. 

கலீல் அகமதுவின் செயலை மனதில் வைத்திருந்த சாமுவேல்ஸ், நேற்றைய போட்டியில் பதிலடி கொடுத்தார். தொடக்கத்திலேயே அந்த அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட 2வது ஓவரிலேயே களத்திற்கு வந்தார் சாமுவேல்ஸ். புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் ஓவர்களை நிதானமாக ஆடிவந்த சாமுவேல்ஸ், கலீல் வீசிய 9வது ஓவரை அடித்து நொறுக்கிவிட்டார். கலீல் பந்துவீச வந்ததுமே அடித்து ஆட தயாரான சாமுவேல்ஸ், அந்த ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசினார். அதற்கு அடுத்து கலீல் வீசிய ஓவரில் நிதானமாக ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் இக்கட்டான சூழலில் இருந்ததால், பொறுப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த சாமுவேல்ஸால் தொடர்ச்சியாக அடித்து ஆட முடியாது. எனவே கலீலின் இரண்டாவது ஓவரில் அடக்கி வாசித்தார். அதன்பிறகு கலீலின் ஓவரை எதிர்கொண்டிருந்தால் வெளுத்து வாங்கியிருப்பார். ஆனால் அதற்குள்ளாக ஜடேஜா அவரை வீழ்த்திவிட்டார்.

சாமுவேல்ஸ் ஒரு அதிரடி வீரர். அவரது போதாத காலம். தற்போது ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார். அவரை வம்புக்கு இழுத்து பெரிதாக வாங்கிக்கட்டி கொண்டிருப்பார் கலீல். நல்லவேளையாக ஜடேஜா வீழ்த்திவிட்டார். இந்தியாவுக்கு எதிரான தொடர் முழுவதிலும் சாமுவேல்ஸ் அடித்தது அந்த ஓவரைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.