Saina Nawal PV Sindh HS pranai participating superseries are starting today ...
இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் பங்கேற்கும் சூப்பர்சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டி சீனாவில் இன்றுத் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு துபாய் சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் போட்டிக்கு தகுதிபெற சாய்னா, பிரணாய் தீவிரமாக உள்ளனர். இவர்கள் இருவருமே சர்வதேச ஒற்றையர் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், சமீபத்தில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை சந்திக்கிறார்.
அதேபோன்று சிந்து ஜப்பானின் சயாகா சாடோவை சந்திக்கிறார். சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்ளலாம்.
இதனிடையே, ஸ்ரீகாந்தை வீழ்த்தி தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்ற ஹெச்.எஸ்.பிரணாய், இந்தப் போட்டியின் முதல் சுற்றில் தகுதிச்சுற்று வீரரை சந்திக்கிறார்.
உடற்தகுதி பிரச்னை காரணமாக கடந்த இரு சூப்பர் சீரிஸ் போட்டிகளை தவறவிட்ட சௌரவ் வர்மா இப்போட்டியில் களம் திரும்புகிறார். முதல் சுற்றில் அவர் பிரான்ஸின் பிரைஸ் லெவர்டெஸை சந்திக்கிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை, போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஸங் சிவெய்-ஹுவாங் யாகியோங் இணையுடன் முதல் சுற்றில் மோதுகிறது.
ஆடவர் இரட்டையர் இணையான மானு அத்ரி - சுமித் ரெட்டி, முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் மார்கஸ் ஃபெர்னால்டி கிடியான் - கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ இணையை எதிர்கொள்கிறது.
மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை, தென் கொரியாவின் ஹா நா பேக் - சே யூ ஜங் இணையுடன் முதல் சுற்றில் மோதுகிறது.
