மீண்டும் வெற்றிநடை போடும் முனைப்பில் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா நேவால் களமிறங்குகிறார்
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் மலேசியாவில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.
இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் களமிறங்குகிறார். கடந்த ஆண்டில் காயத்தால் அவதிப்பட்டதால் சாய்னா நேவால் போட்டிகளில் சரிவர விளையாட இயலாமல் போனது. இருப்பினும், ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், 2-ஆவது சுற்றுடன் வெளியேறினார்.
இந்நிலையில், அண்மையில் முடிவடைந்த பிரீமியர் பாட்மிண்டன் லீக்கில் அவாதே வாரியர்ஸ் அணியை வழிநடத்தியதோடு, 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றார்.
இருப்பினும், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின், வெள்ளி வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோரிடம் தோல்வி கண்டார்.
இந்நிலையில், மீண்டும் வெற்றிநடை போடும் முனைப்பில் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா களமிறங்குகிறார்.
அவர் தவிர பி.காஷ்யப், அஜய் ஜெயராம், ரிதுபர்னா தாஸ் உள்ளிட்டோரும் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்குகின்றனர்.
